எம்ஜிஆருக்கு ஒரு நீதி.. காமராஜருக்கு ஒரு நீதியா..?

First Published Nov 13, 2017, 10:38 AM IST
Highlights
mgr statue in karaikudi controversy


காரைக்குடியில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையால் பரபரப்பும் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

மார்பளவு எம்ஜிஆர் சிலை:

காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் மார்பளவு எம்ஜிஆர் சிலை ஒன்றை 1984-ம் ஆண்டு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவர் அமைத்தார். குப்பைத்தொட்டி அருகே அந்த மார்பளவு சிலையை அமைத்தார் கிருஷ்ணன். சிமெண்ட் சிலையான அது, நீண்டகாலமாகி விட்டதால் சிதைந்துபோக ஆரம்பித்தது.

2015-ம் ஆண்டு குப்பைத்தொட்டி அகற்றப்பட்டு பீடம் கட்டி, வேறு புதிய சிலையை அதிமுக நிர்வாகிகள் நிறுவினர். அனுமதியில்லாமல் சிலை வைக்கக்கூடாது என பிரச்னை கிளம்பியதால், மீண்டும் பழைய மார்பளவு எம்ஜிஆர் சிலையே நிறுவப்பட்டது.

முழு உருவ எம்ஜிஆர் சிலை:

அப்போதிலிருந்து அந்த பழைய மார்பளவு எம்ஜிஆர் சிலைதான் இருந்துவந்தது. அடுத்தவாரம், சிவகங்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை திடீரென மார்பளவு எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டு முழு உருவ எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:

நேற்று, இரவோடு இரவாக இந்த முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், அதிர்ச்சியடைந்தனர். முழு உருவ சிலை அமைக்க அனுமதி பெறப்பட்டதா? அனுமதி பெறப்பட்டிருந்தால், எதற்காக இரவோடு இரவாக அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்புகின்றனர்.

இதையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து, இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துணியால் மூடப்பட்டுள்ள காமராஜர் சிலை:

இந்த சம்பவம் அறிந்த சிவங்கங்கை நகர மக்களும் காமராஜர் விசுவாசிகளும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

சிவகங்கையில் அரண்மனை வாசல் முன்பு மார்பளவு காமராஜர் சிலையை சிவாஜி கணேசன் திறந்துவைத்தார். காரைக்குடியில் இருந்த எம்ஜிஆர் சிலையை போலவே இந்த காமராஜர் சிலையும் சிதைந்து போனதால்,  முழு உருவ சிலை காமராஜர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திறக்கப்படாமல், துணியால் கட்டப்பட்டுள்ளது.  

ஆளும் கட்சியாக அதிமுக இருப்பதால், எளிமையாக எம்ஜிஆர் சிலையை நிறுவிவிட்டனர். ஆனால் அதேநேரத்தில் நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலையை திறக்கமுடியவில்லை. எம்ஜிஆருக்கு ஒரு நீதி.. காமராஜருக்கு ஒரு நீதியா? என சிவகங்கைவாசிகளும் காமராஜர் விசுவாசிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.
 

click me!