
தஞ்சாவூர்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடக்கும் நீதி விசாரணையில் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரசு தலைவர் திருநாவுக்கரசர் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14–ஆம் தேதி திருவள்ளூரில் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா நடக்கிறது. வருகிற 18–ஆம் தேதி கோவையில் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக கூறியுள்ளார். வருகிற 19–ஆம் தேதி இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரசு கட்சியினர் வழங்குவர்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தபோது அதை எதிர்த்து கொறடா உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்களின் தலையெழுத்து நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும். அவர்கள் எம்.எல்.ஏ.க்களா? இல்லையா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுகவில் உள்ள ஒரு அணியினரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்த ஒரு மாதத்தில் இந்தச் சோதனையை நடத்தி இருந்தால் இப்போது என்னென்ன கிடைத்தது என்று கூறப்படுகிறதோ அதை விட கூடுதலாக கிடைத்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சோதனை செய்திருந்தால் இருந்தால் இதைவிட அதிகமாக கிடைத்து இருக்கும்.
இரட்டைஇலை சின்னம் யாருக்கு? என்று முடிவு தெரிவிக்க வேண்டிய இறுதிகட்டம் வந்துவிட்டது. இரட்டை இலையை கொடுக்கக்கூடிய அணி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியைப் பலப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. அநேகமாக இந்த அணிக்கு இரட்டை இலையை கொடுக்க இருப்பதாக எனது கணிப்பு. இவர்களுடன் வரும் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து தமிழகத்தில் காலூன்ற முடியுமா? என பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதற்காகதான் தினகரன் அணியினரை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் தவறு இல்லை. நல்லது தான். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி நேரில் வந்து பார்த்து, சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.
ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் மோடி வந்து பார்க்காதது ஏன்? என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடக்கும் நீதி விசாரணையில் பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது இலக்கு. அந்த இலக்கை நோக்கி காங்கிரசு தொடர்ந்து பயணம் செய்யும். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்க உரிமை உள்ளது" என்று அவர் கூறினார்.