
சிவகங்கை
ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் விசாரணையை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும் என்று மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரியப்பன் கென்னடி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக அம்மா அணி சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசியது:
"நாங்கள் 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்ததுபோல் மேலும் 20 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடியின் செயல்பாடுகள் சரியில்லை என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் மனு கொடுக்க ஏற்பாடுகள் செய்தனர். இதனைத் தடுக்கவும் அவர்களை மிரட்டவும்தான் இந்த வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைத்துள்ளனர். நாங்கள் அதனை வரவேற்றோம், சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றோம். பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஓ.பன்னீர்செல்வம் என அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு என தெரிகிறது.
நட்பு என்றால் அது சசிகலா தான். நான் அவரை சந்தித்தபோது உங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள் அதனால் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர், ஜெயலலிதா வீடியோ எடுக்க மட்டுமே சொன்னார் அதை வெளியிட சொல்லவில்லை. அவர் இப்போது மறைந்து விட்டார். எப்படி வெளியிடவது என்று கூறினார்" என்று இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மாரியப்பன் கென்னடி பேசியது: "பொதுச்செயலாளர் சசிகலாவால் அமைச்சர் ஆனவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளம்புகின்றனர். அவருடைய மரணம் இயற்கை மரணமே, எந்த விசாரணைக்கும் தாயார் என்று துணை பொதுச்செயலாளர் கூறியுள்ளார். முதலில் விசாரணையை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்.
உயிரோடு இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் பிரதமர், ஆனால் அப்போலோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் வரவில்லை. கட்சியின் பொதுசெயலாளர் சசிகலா இல்லை என்றால் எடப்பாடி அணியினர் என்றோ அ.தி.மு.க. கட்சியை கலைத்து இருப்பார்கள்" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உமாதேவன், ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, நகர செயலாளர் கோபால்,ஜெயலலிதா பேரவை செயலாளர் நாகசேகர், என்.பி.நமச்சிவாயம், கிளை கழக செயலாளர் முத்து,வக்கீல் குருமுருகானந்தம், பாபு, மாணவரணி செயலாளர்கள் விஜயகுமார், அசோக், நிர்வாகிகள் பாக்கியம், நாகு நரசிங்கம், மேட்டுமடை செந்தில், இளையான்குடி சிவநேசன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.