பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்து கொடுத்தது உண்மைதான் !! போட்டுடைத்த விசாரணை அறிக்கை !!!

First Published Nov 13, 2017, 9:52 AM IST
Highlights
sasi bangalore prison


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என்று கர்நாடக அரசிடம் தாக்கல் செய்த விசாரணை குழு அறிக்கையில் பரபரப்பு தகவல் இடம் பெற்றுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா கடந்த ஜூலை மாதம் பரபரப்பு அறிக்கையை தனது உயர் அதிகாரியான சிறைத்துறை டி.ஜி.பி. யாக இருந்த சத்தியநாராயணராவிடம் வழங்கினார்.



அந்த அறிக்கையில் சத்தியநாராயணராவே  2  கோடி ரூபாய்  லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சட்டவிரோதமாக சொகுசு வசதிகள்  செய்து கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும்  சசிகலா, இளவரசி ஆகியோர் வெளியே ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டு சிறைக்கு திரும்புவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.



இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த உயர்மட்ட குழுவினர் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்துள்ளது

அந்த அறிக்கையில் பெங்களூரு பரப்பனஅக்ரஹரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததும், மேலும் சிறையில் பல முறைகேடுகள் நடந்ததும் உண்மை தான் என்று கூறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

click me!