
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடுபிடிக்கிறது. திமுக, அதிமுக தவிர சுயேட்சைகளாக தினகரன், விஷால் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொந்த அண்ணன் மகன் எம்ஜிசி.சந்திரனும், போட்டியிடுகிறார்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ள அதிமுக, ஆளும் கட்சியாக தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுகிறது. அதிமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று காட்டுவதற்காக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் திமுக களமிறங்கியுள்ளது.
இரட்டை இலை ஓபிஎஸ்-இபிஎஸ் அணியிடத்தில் இருந்தாலும் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான் என்று நிரூபித்து மீண்டும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் தினகரன் களம் காண்கிறார்.
இதற்கிடையே விஷால் என்ன நோக்கத்திற்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதே தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்ப்பதற்காக நிற்கிறேன் என கூறி அவரும் களமிறங்குகிறார். இன்று மதியம் அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
பாஜக சார்பில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் கரு.நாகராஜனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இப்படியாக பலமுனைப்போட்டி நிலவினாலும், கடுமையான போட்டி என்பது திமுக, அதிமுக, தினகரன் இடையே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் தலைவருமான எம்ஜிஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் எம்ஜிசி.சந்திரனும் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். எம்ஜிஆரின் ரத்த சொந்தமான சந்திரன் போட்டியிடுவது போட்டியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி அளவில் எம்ஜிசி சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதிமுகவில் குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், எம்ஜிஆரின் ரத்த சொந்தமான சந்திரன் போட்டியிடுவது, ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.