காலியாகும் மீனாட்சி அம்மன் கோவில் கடைகள்….. கண்ணீர் மல்க அப்புறப்படுத்திய  வியாபாரிகள் !!

First Published Feb 9, 2018, 12:20 PM IST
Highlights
merchants vaccate their shops from meenakshi temple


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கடைகளை காலி செய்யும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதையடுத்து , கனத்த இதயத்துடன் வியாபாரிகள் தங்களது கடைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின.விபத்தில் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. அந்தப்பகுதியில் இருந்த தூண்கள் மற்றும் சிலைகள் கருகின. 5-க்கும் மேற்பட்ட தூண்கள் கீழே சாய்ந்தன.  மேலும் பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

இந்த பயங்கர தீ விபத்துக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகள்தான்  காரணம் என்று கூறப்பட்டதால்  சம்பந்தப்பட்ட கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கியது.

ஆனால் கடை உரிமையாளர்கள் கடைகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் தந்தால் உடனடியாக காலி செய்வதாகவும் கூறினர். 

இந்த நிலையில்  மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வீரவசந்த ராயர் மண்டப பகுதிகளில் உள்ள தீப்பிடித்து எரிந்த கடைகள் போக மீதமுள்ள 22 கடைகளை இன்று மதியம் 12 மணிக்குள் அகற்ற உத்தர விட்டார்.

மேலும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை வேறு இடத்தில் வைப்பதற்கு  கோவில் நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவையடுத்து இன்று காலை கடை உரிமையாளர்கள் கோவில் வளாகத்துக்குள் வந்தனர்.  அங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசாரும் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்து அப்புறப்படுத்தினர். 22 கடைகளும் காலி செய்யப்பட்டன.  பல ஆண்டுகாலமான கோவில் வளாகத்துக்குள் கடை வைத்து பிழைத்து வந்த இந்த வியாபாரிகள் தற்போது செய்வதறியாது திகைத்து  நிற்கின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புலம்பினர்.

இத்தனை ஆண்டு காலமாக மீனாட்சி சன்னதியில் இருந்து பழக்கப்பட்டுவிட்ட தங்களுக்கு இந்த இடத்தை விட்டு போக மனமில்லை  என்றும், மீனாட்சி அம்மன் மீண்டும் எங்களுக்கு வழி    திறக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் பிரார்த்தனை செய்தனர்.

click me!