
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச்சிலை, நாடாளுமன்றத்தில் அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது குறித்து அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைச்சிறந்த அரசியல் அறிஞர். பலமொழி பேசும் வல்லமை பெற்றவர். இத்தகைய போற்றுதலுக்குரிய ஜெயலலிதாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் திருவுருவச்சிலை அமைத்திட மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் துவங்க வேண்டும்.
ஜெயலலிதாவின் வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் துணை பாடமாக வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.