
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரைக் களமிறக்க திட்டமிட்டன. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில், வேட்பாளர் யார் என்பது குறித்து, எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பாஜக குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்தை அறிவித்திருந்த நிலையில், எதிர்கட்சி சார்பில் யார், குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீரா குமார் மக்களவைத் தலைவராக பதவி வகித்த முதல் பெண் ஆவார். 72 வயதாகும் மீரா குமார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
மீரா குமார், முன்னாள் துணைப் பிரதமரும் மிக முக்கியத் தலித் தலைவர் ஜெகஜீவன்ராம், இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான இந்திராணி தேவி தம்பதியர்களின் புதல்வியும் ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார், வழக்குரைஞராக உள்ளார். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.