
இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமால் களம் காண்கிறார்.
நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் தாக்கல் செய்துள்ள நிலையில், வாக்கு சேகரிப்பதற்கான சுற்றுப்பயணத்தை இன்று அவர் தொடங்குகிறார்.
இதற்கிடையே எதிர்கட்சிகளின் சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வரும் புதன் கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து வியாழக் கிழமை முதல் மீராகுமாரும் வாக்கு சேகரிப்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்பான்மை பலத்துடன் குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ளும் பா.ஜ.க.வுக்கு, மீராகுமார் கடும் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.