கண்டப்படி பேசும் ஆளுநர் தேவையில்லை.. உடனே வேந்தர் பொறுப்பில் இருந்து தூக்குங்க..வெகுண்டு எழுந்த வைகோ..

Published : Mar 13, 2022, 03:10 PM ISTUpdated : Mar 13, 2022, 03:11 PM IST
கண்டப்படி பேசும் ஆளுநர் தேவையில்லை.. உடனே வேந்தர் பொறுப்பில் இருந்து தூக்குங்க..வெகுண்டு எழுந்த வைகோ..

சுருக்கம்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்த அவர் அறிக்கையில்: "தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

வெள்ளைக்காரனின் துப்பாக்கியும், லத்திக் கம்புகளும்தான் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது என்று, இந்தியக் குடிஅரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பேசி இருக்கின்றார்கள். அந்த வரலாறு, ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; பல்வேறுபட்ட பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம்தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் கூட, Union of India யூனியன் ஆஃப் இந்தியா, அதாவது இந்திய ஒன்றியம் என்றுதான் கூறுகின்றது.

மேலும் படிக்க: சிதம்பரம் கோவில் சர்ச்சை.. தீட்சிதர்கள் மீது நடவடிக்கையா..? அமைச்சர் சொன்ன அதிரடி தகவல்..

அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள். அதுவும், ஆளுநருக்குத் தெரியவில்லை. அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார். புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம்; மத்திய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது.

மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக்கழகங்கள் வளர்க்க வேண்டும்; மாநில அரசுகளின் கல்விக்கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணை வேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக்கழகங்களின் கடமை அல்ல; அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு, நிலையான தீர்வு என்பது, முன்பு மாநிலங்களின் அதிகாரத்தில் இருந்து பறித்துக்கொண்ட கல்வியை, மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டும் என அவர் பேசி இருக்கின்றார்.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழகத்தின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார்.

7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார். எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை.பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என, மதிமுக சார்பில் வலியுறுத்துகின்றேன்." என வைகோ தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?