மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டதீர்மானங்கள் விபரம்...

First Published Dec 27, 2016, 3:21 PM IST
Highlights


மக்கள் நலக்கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது உள்ளிட்ட தீர்மானங்கள் உயர்நிலை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அவை குறித்த விபரம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், இன்று  சென்னை - அண்ணாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:1

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தோழமையும், நட்பும் என்றும் தொடரும்.

தீர்மானம்:2 தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடாமல், கர்நாடகம் வஞ்சித்ததாலும், காவிரி பாசனப் பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன.

சம்பா சாகுபடி பயிர்கள் காய்ந்து கருகியதால் ஏற்பட்ட அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும்  காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 45 விவசாயிகள் உயிர் இழந்தது தாங்கொணாத வேதனை அளிக்கிறது. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, குடிக்கத் தண்ணீர் இல்லாமலும், கால்நடைகளைப் பராமரிக்க முடியாமலும் மக்கள் மிகுந்த துயர நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை எவ்வித நிபந்தனையும் இன்றித் தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வேலை இழந்து வறுமையில் வாடும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், 2017 ஜனவரி 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

click me!