திமுக கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதால், நேற்று கட்சி ஆரம்பித்த IJK வும் நாங்களும் ஒண்ணா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு வெறும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியதால், நேற்று கட்சி ஆரம்பித்த IJK வும் நாங்களும் ஒண்ணா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அவரைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறின. பின் இந்த நான்கு கட்சிகளும் திமுகவின் தோழமை கட்சிகளாகவே செயல்பட துவங்கின.அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக. கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இக்கட்சிகள் வேறு எந்த சிந்தனையும் இன்றி திமுகவுடன் பேச்சை தொடர்ந்தன.
அதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இரு தொகுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுக்கு மட்டும் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கி திமுக. தலைமை மூக்கறுப்பு செய்துள்ளது. அதை சரிக்கட்டும் விதமாக தேர்தலுக்கு பின் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
கூட்டணி பேச்சு துவங்கியதில் இருந்து 4 தொகுதிகள்; ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு மல்லுக்கட்டியது மதிமுக. திருச்சி, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி என நான்கு தொகுதிகள் அடங்கிய பட்டியலை துரைமுருகன் தலைமையிலான திமுக. குழுவிடம் கொடுத்திருந்த ம.தி.மு.க.வினர் அவற்றை ஒதுக்கும்படி இரண்டு முறை பேச்சு நடத்தினர். ஆனால் தேர்தலில் மதிமுக. போட்டியிட ஒரு தொகுதி மட்டுமே தரப்படும்; வேண்டுமானால் ராஜ்யசபா தேர்தல் வரும்போது ஒரு பதவி தரப்படலாம் என்பதில் திமுக. பிடிவாதமாக இருந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த வைகோ நேற்று முன்தினம் அறிவாலயம் வரை போய் விட்டு கையெழுத்து போட மறுத்து விட்டு வந்தார். அதன் பிறகாவது 2 லோக்சபா தொகுதிகள் என்ற அளவுக்காவது திமுக. இறங்கி வரும் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் திமுக. தன் முடிவை தளர்த்த மறுத்து விட்டது.
இதற்கிடையில் "இன்றைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும். நாளை விருதுநகர் மாநாட்டுக்கு எல்லாரும் போய் விடுவோம்; அதற்குள் வந்தால் கூட்டணியில் இடம்; இல்லையேல் உங்கள் முடிவு" என திமுக. தரப்பில் நேற்று கூறப்பட்டதாக தெரிகிறது.
அப்போதும், "எனக்கு இது தான் கடைசி தேர்தல். கட்சிக்கு அங்கீகாரமும் இல்லை. தேர்தல் கமிஷனில் பம்பரம் சின்னம் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கட்சி அங்கீகாரம் பெறுவதற்காக நான்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். நான் நாற்பது தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று வைகோ கூறியிருக்கிறார். அதற்கும் திமுக மறுத்தது.
இதனையடுத்து மதிமுகவுக்கு ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா MP. பதவியும் ஒதுக்குவது என உடன்பாடு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் திமுக. தலைவர் ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர். ஒதுக்கப்பட்ட ஒரு லோக்சபா தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி திமுக. தலைமை நிபந்தனை விதித்துள்ளது.
பின்னர் வைகோ அளித்த பேட்டியில்: மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக. கூட்டணி வெற்றி பெற முழு அர்ப்பணிப்போடும், ஒத்துழைப்போடும் பணியாற்றுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும், எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்பது குறித்தும் இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது என சோகமாகவே சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார் வைகோ.
இவ்வளவு நாட்களாக கூடவே இருந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆளுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்த தி.மு.க. தலைமை வைகோ விஷயத்தில் மட்டும் இப்படி நடந்து கொண்டதை மதிமுக. நிர்வாகிகள் ஏற்கவில்லை. முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. - IJK. வரிசையில் மதிமுகவையும் சேர்த்து விட்டதாக அவர்கள் குமுறுகின்றனர்.