தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக முன்னாள் அமைச்சரான கிணத்துக்கடவு தாமோதரன், அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார். சுமார் ஆறு மாத இடைவெளியில் தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துள்ளது
கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிக முக்கியமான நபராக திகழ்பவர் கிணத்துக்கடவு தாமோதரன். அதிமுக சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏவாகவும், ஒருமுறை அமைச்சர் பதவியிலும் இருந்துள்ளார்.ஜெயலலிதா மறைவிற்குப் பின் கட்சி இரண்டாக பிரிந்த பின், ஓபிஎஸ் அணியில் இருந்தார். அதன் பிறகு நடந்த ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பால் கடுப்பான கிணத்துக்கடவு தாமோதிரன் அதிமுக கட்சியிலிருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார்.
“எங்களுக்கு அணிகள் இணைக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை. நாங்கள் எவ்வளவோ கூறியும், ஓபிஎஸ் செவி கொடுக்கவில்லை. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. அம்மா தனக்குப் பிறகும் கட்சி இருக்க வேண்டும் என விரும்பினார், அப்படி இருக்க வேண்டுமென்றால், அனைவரும் டிடிவி தினகரனின் தலைமையில் இணைய வேண்டும் என ஆஹா ஓஹோவென புகழ்ப்பாடிய அதே கிணத்துக்கடவு தமோதிரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஆனால், அதற்கான காரணம் இன்னும் தெளிவாக சொல்லாதது அமமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தினகரன் அணியிலிருப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், திமுகவில் யாருமே சீண்டாத நிலையில் கூச்சப்படாமல் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துகொண்டார்.