தமிழக போலீசார் பற்றிய ரகசியத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட மேத்யூ!! நடந்தது என்ன?

By sathish kFirst Published Jan 28, 2019, 2:21 PM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தார். மேத்யூ சென்னையில் இருந்தபோது நடந்த விஷயங்களை கொச்சி சென்றதும் நேற்று தனது ஃபேஸ்புக்கில்  பதிவு செய்திருக்கிறார். 


குறிப்பாகத் தமிழக போலீசார்  பாராட்டு மழை பொழிந்ததாக  மேத்யூ கூறியுள்ளார். “எனது வழக்கு விவகாரங்களுக்காக நான் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன். நான் சென்னைக்கு வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்குப் புறப்பட்டபோதே சீருடை அணியாத போலீசார் என்னைக் கண்காணிப்பதற்காக பின் தொடர்ந்து வந்தனர். நான் காரில் வந்தபோது எனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக வந்த போலீசாரைத் தவிர மோட்டார் பைக்குகளில் 12 முதல் 15 போலீசார் என்னை சுற்றி சுற்றியே  வந்தனர்.

நான் ஹோட்டலில் தங்கியிருந்த  போது இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் ஹோட்டல் அருகே வாகனங்களை நிறுத்தி என்னை கண்காணித்தனர்.

என்னைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட போலீசாரிலேயே இரண்டு, மூன்று போலீஸார் என்னைத் தேடிவந்து கைலுக்கி, உண்மையை வெளிக் கொண்டுவந்ததற்காக என்னைப் பாராட்டினார்கள். அவர்கள் என்னிடம், “அற்புதமான பணியை செய்திருக்கீங்க. எங்களால சத்தம் போட்டு, வெளிப்படையா உங்களைப் பாராட்ட முடியலை. ஆனா மனசுக்குள்ள உங்களப் பாராட்டிக்கிட்டுதான் இருக்கோம். எங்க மேலதிகாரிகளுக்கு முதுகெலும்பே இல்லை. அவங்க மேலிடம் என்ன சொல்லுதோ அதைத்தான் செய்துக்கிட்டிருப்பாங்க. ஆனா போலீஸ்காரங்க எல்லாரும் உங்கள மனசுக்குள்ள நிச்சயம் உங்களப் பாராட்டுவாங்க. மேலதிகாரிகள் வெளிப்படையா பாராட்டினா நாங்களும் உங்களைப் பாராட்டுவோம்’ என்றார்கள். அதில் ஒருவர் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தினார்.

இதையெல்லாம் பார்த்து எனக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருந்தது. சென்னை போலீஸ்கார்களே என்னை பத்திரமாய் பாதுகாத்ததற்காக உங்களுக்கு நன்றி” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மேத்யூ சாமுவேல். தமிழக போலீஸ் துறையின் அமைச்சராக இருப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது  குறிப்பிடத்தக்கது.

click me!