
குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள தினகரன், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் ,பன்னீர் செல்வம் அணியில் மதுசூதனன், சசிகலா அணியில் தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், சி.பி.எம். சார்பில் லோகநாதன், தேமுதிக சார்பில் மதிவாணன், தீபா பேரவை சார்பில் தீபா உள்பட மொத்தம் 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான, வேட்பு மனு பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், குற்ற வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டவரும், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவருமான தினகரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என மருது கணேஷ் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, தேர்தல் அலுவலரிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
டி.டி.வி தினகரன், 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி சட்டத்தை மீறி, 62,61,313 அமெரிக்க டாலர் தொகை முறையற்ற பரிவர்த்தனை செய்து நாட்டின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தினார்.
சட்டவிரோதமான வருவாய் மூலம் 44,37,242.90 ஸ்டெர்லிங் பவுண்டு தொகை சேர்த்தார். இது தொடர்பாக அவருக்கு, வெளிநாட்டுப் பணம் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
நீதி விசாரணை ஆணையத்தின் முன்பாக, அவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துத் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார்.
அதனால், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைச் சட்டம் 1973, பிரிவு 9(1), 8(1)ன் படி விதிமுறைகளை மீறியதற்காக நீதி விசாரணை ஆணையம் அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்தது.
அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு ஆணையமானது டிடிவி தினகரன் மீது, 28 கோடி ரூபாய் பிணையத் தொகையிட்டு, 45 நாட்களுக்குள் கட்டுமாறு பணித்தது.
இதை உயர்நீதிமன்றம் கடந்த 2000-ம் ஆண்டிலேயே வழங்கிவிட்டது. இதைச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 06.01.2017 அன்றும், இந்த அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் சுட்டிக்காட்டியிருந்தது.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருக்கும் வழக்கு விசாரணையில் அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடியவர் எனக்கூறியிருக்கிறது.
அப்படியிருந்தும், டிடிவி தினகரன் இதுவரை, 28 கோடி ரூபாயை, அரசுக்குக் கட்டவில்லை. அரசும் அதற்கான எந்தவொரு தவணையையும் கொடுக்கவில்லை.
இப்பிரச்னைகளில் இருந்து அவர் தப்பிப்பதற்காக, இந்தியக் குடியுரிமையிலிருந்து வெளியேறி, சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருக்கிறார்.
அப்படிப் பார்க்கும் பட்சத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த எவரும், இந்தியாவில் நடக்கும் எந்தவொரு தேர்தலிலும் பங்கெடுக்க முடியாது.
இந்த அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான வழக்கு, இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வின் முன் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் குற்ற பரிசீலனை வாதத்தில் ,டிடிவி தினகரன் உயர் நீதிமன்றத்தில், தான் சிங்கப்பூரைச் சேர்ந்த நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளவன் என்று மேல்முறையீடு செய்திருக்கிறார்.
ஆகையால் இவரைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்’ என்று அந்தப் புகார் மனுவில் மருது கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.