ரஜினிக்காக களமிறங்கும் மாரிதாஸ்.... தேர்தல் பிரசாரம் செய்யவும் தயார் என்று தடாலடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Oct 8, 2019, 8:48 AM IST
Highlights

 என்னை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளும் மோசமானவைதான். இரண்டுமே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கிற கூட்டம் என்றாலும் முதலில் அழித்தொழிக்கப்பட வேண்டியது திமுகதான். 

ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக தடாலடியாக அறிவித்திருக்கிறார் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ்.
சமூக ஊடங்களில் மாரிதாஸ் மிகவும் பிரபலம். பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து சமூக ஊடகங்களின் வழியாகவே பிரசாரம் செய்துவருகிறார். அண்மையில் காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து அவர் அடுத்தடுத்து போட்ட வீடியோ பதிவுகள் திமுகவை அதிர்ச்சி அடையவைத்தது. திமுக எம்.பி.யே நேரில் சென்று போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக மாஸ் காட்டிவருகிறார்.

 
மாரிதாஸின் பதிவுகள் பாஜகவினர் வலது சாரிகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ, அதே அளவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் எரிச்சலடைய செய்துவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு 'காமதேனு’ வார இதழில் பேட்டி அளித்திருக்கும் மாரிதாஸ், பல்வேறு விஷயங்களைக் குறித்து பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்களை விமர்சிக்கும் நீங்கள், அதிமுகவை மட்டும் விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு மாரிதாஸ் பதில் அளித்திருக்கிறார்.


“என்னுடைய பழைய ஃபேஸ்புக் பதிவுகளை வாசித்தால், அதிமுகவை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன் என்பது விளங்கும். என்னை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளும் மோசமானவைதான். இரண்டுமே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கிற கூட்டம் என்றாலும் முதலில் அழித்தொழிக்கப்பட வேண்டியது திமுகதான். இவர்கள் கொள்ளையடிப்பதோடு இல்லாமல் தேச விரோத சக்திகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். திமுகவை விமர்சிப்பதால், அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோல ரஜினி கட்சித் தொடங்கினால், அங்கே போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மாரிதாஸ், “சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரத் துடிக்கிற ஆள் கிடையாது ரஜினி. 70 வயதிலும் நடித்து சம்பாதித்த பணத்தைத்தான் அரசியலுக்கு செலவிட வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய நோக்கமும் சரியாக இருக்கிறது. எனவே ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பது மட்டுமல்ல, அவரை ஆதரித்துப் பிரசாரமும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

click me!