சாதி அரசியல் கூடாது என்ற நிலைபாட்டால் பலர் பாஜகவில் இருந்து விலகி செல்கின்றனர்.. அண்ணாமலை பயங்கர விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 12:42 PM IST
Highlights

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக குழு அமைத்து அந்தக் குழு எந்தெந்த வாகனங்கள் பொருட்கள் ஊர்தியில் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பல கட்ட ஆலோசனை நடத்தி, தமிழக அரசுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை கேட்டு பெற்று உரிய முறையில் பதில் அளிக்கப்படும் என அவர் கூறினார்.

சாதி அரசியல் கூடாது என்ற பாஜகவின் நிலைப்பாட்டால் கட்சியில் இருந்து பலர் விலகி செல்கின்றனர் என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். உத்திரபிரதேச மாநில தேர்தல் நெருங்கிவரும் நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ள நிலையில் அண்ணாமலையார் இவ்வாறு கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக உத்தரப் பிரதேச மாநில தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை தேர்தல் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் யாதவர்கள் மற்றும் பிராமணர்களின் வாக்குகளை குறிவைத்து யோகி ஆதித்யநாத் வியூகம் வகுத்து வரும் நிலையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய வாக்குகளை முழுவதுமாக அறுவடை செய்ய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்திகளை வகுத்து வருகிறார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து விளக்கும் அளித்துள்ள அவர், தலித், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாதோர், சிறு தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறையை யோகி அரசு  கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்றும், மாறுபட்ட சித்தாந்தமாக இருந்தாலும் அவருடன் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றியதாகவும்  ஆனால் இதை பெறுத்துக் கொள்ள முடியாது என்பதால் கட்சியில் இருந்து விலகியதாக இவர் கூறியுள்ளார். இவரைப்போலவே மூன்று எம்எல்ஏக்கள் பிரேஜேஷ் பிரஜா பதி, ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். அடுத்தடுத்து பாஜகவிலிருந்து முக்கிய உறுப்பினர்கள் விலகியிருப்பது யோகி ஆதித்யநாத்தின் வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

அதில் 108 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் கொண்டாடப்பட்டது. ஏராளமான கலை நிகழ்ச்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தொடர்ந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால்தான் பாஜகவில் இருந்து பலர் விலகிச் சென்றுள்ளனர் என கூறியுள்ளார். அதேபோல் குடியரசு தின விழா அணிவகுப்பில் வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகிய தலைவர்கள் அடங்கிய தமிழக அரசின் ஊர்தி குடியரசு விழாவில் அனுமதிக்காதது குறித்து விளக்கம் அளித்த அவர், வா உ சி வேலுநாச்சியார் ஆகியோர் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல. தமிழக அரசின் ஊர்திகள் அனுமதிக்கப்படாதது குறித்து  பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் பதில் அளிக்கும் என்றார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக குழு அமைத்து அந்தக் குழு எந்தெந்த வாகனங்கள் பொருட்கள் ஊர்தியில் இடம் பெற வேண்டும் என்பது குறித்து பல கட்ட ஆலோசனை நடத்தி, தமிழக அரசுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை கேட்டு பெற்று உரிய முறையில் பதில் அளிக்கப்படும் என அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி எந்த வகையிலுத் கருத்துச் சுதந்திரம் ஆகாது,  குழந்தைகளின் மீது வஞ்சகமாக ஒரு கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது என்றும், இதை சட்டரீதியாக அணுக உள்ளதாகவும் அவர் கூறினார். 
 

click me!