
சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் பட்டம் வழங்குவதில் தமிழக மக்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை.
கருணாநிதிக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவருக்கு வழங்கிய "கலைஞர்" என்ற படத்தையே அவர் அதிகம் விரும்புவார்.
அதேபோல், புரட்சி நடிகர், இலட்சிய நடிகர், இசை ஞானி, கலை ஞானி, வித்தக கவிஞர் என அன்று முதல் இன்று வரை, கருணாநிதி கொடுத்த பட்டங்கள், காலங்களை கடந்து இன்றும் நிலைத்து நிற்கின்றன.
அரசியல் ரீதியாக கருணாநிதியை எப்படி விமர்சித்தாலும், கலை, இலக்கியம், எழுத்து, பேச்சு என பல விஷயங்களில் இன்னும் அவரே முன்னோடி என்பதை மறுக்க முடியாது.
ஏனெனில், ஒருவருக்கு ஒரு பட்டம் கொடுத்தால், அதற்கு அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதாகவே இருக்கும். அதனால் அவர் கையால் குட்டு வாங்க என்றுமே ஒரு கூட்டம் காத்திருக்கும்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை படாமல், கையில் கொஞ்சம் காசு இருந்தால், போஸ்டர் செலவிலேயே ஒருவருக்கு பட்டம் கொடுத்து விடலாம் என்ற நிலை அண்மைக்காலம் வரை இருந்தது.
ஆனால், முகநூல் வந்தாலும் வந்தது, காசே செலவில்லாமல், பல பேருக்கு பலர் பட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அப்படித்தான், ஜெயலலிதா இருந்தவரை எங்கே இருந்தார்? எப்படி இருந்தார்? என்றே தெரியாமல் இருந்த தினகரன், தற்போது கட்சியின் துணை பொது செயலாளர் ஆகி, ஆர்.கே நகர் வேட்பாளராகி விட்டார்.
அதனால், தினகரனை பாராட்டி, அவரது ஆதரவாளர்கள் "மக்கள் செல்வர்" என்ற பட்டத்தை முகநூலில் வழங்கி உள்ளனர்.
அதோடு விட்டார்களா என்ன? "அம்மா அவர்கள் கை காட்டி நமக்கு விட்டு சென்ற மக்கள் செல்வர் அண்ணன் டி.டி.வி தினகரன்" என்ற வாசகங்களும் முகநூலில் பட்டையை கிளப்புகின்றன.
அதே படத்தின் மற்றொரு பக்கம், எல்லோருக்கும் குல்லா போட்ட தினகரனுக்கு, எம்.ஜி.ஆரே குல்லா போடுவது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.
அதை பார்க்கும் அனைவரும் "மன்னார்குடி செல்வர்" எப்போது "மக்கள் செல்வர்" ஆனார் என்று ஆச்சர்யத்தோடு கூறி வருகின்றனர்.
"கலி முத்திடுத்துடா அம்பி"ன்னு சொல்லுவாங்களே.. அது இதுதானா?