
ஆர்கே நகர் தொகுதி இடை தேர்தலுக்கான பிரச்சாரம் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. திமுக சாபில் மருதுகணேஷ், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் சூறாவளியாக வாக்காளர்களையும், தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவும், வாக்குகளையும் சேகரித்து வருகிறார்.
அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளும் இரட்டை இலை சின்னம் கேட்டு மோதி கொண்டன. இதனால், தாமதமாக அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசைமைப்பாளர் கங்கை அமரன், பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டினார்.
இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், கங்கை அமரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. அப்போது ரஜினி, தனக்கு ஆர்கே நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, நான் யாருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதைதொடர்ந்து, நடிகர் விஜய்யை அரசியலில், இறக்கும் ஐடியாவே இல்லை என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விஜய்யை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என முடிவு செய்தேன். சினிமா நடிகர் என்பதால், அரசியலில் சீக்கிரம் நுழைந்துவிட முடியும். அதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டேன்.
ஆனால், அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடையாக மாறிவிட்டது. தற்போது, அரசியல் நிலை எப்படி இருக்க கூடாது என்பதை தமிழகத்தை பார்த்தால், தெரிந்துவிடும். இதுபோன்ற சூழலில், எனது மகன் விஜய்யை, அரசியலில் இறக்க நான் விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.
விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.