
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்தது.
இதில் திமுக, அதிமுகவின் 3 அணி, பாஜக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜி, வேட்பாளரான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், தீபா பேரவை நிர்வாகிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.
இதை தொடர்ந்து, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி தொண்டன் சுப்பிரமணி என்பவர் தலைமையில் 50க்கு மேற்பட்ட பெண்கள், நேற்று மாலை திருவொற்றியூரில் திரண்டனர்.
அங்கிருந்து அமைச்சர் செல்லூர் ராஜியை கண்டித்து ஊர்வலமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு திரண்டனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், அமைச்சர் செல்லூர் ராஜியின் உருவ பொம்மையை எரித்தனர்.
தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், புகார் கொடுத்தால், அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது