நடிகை சமாச்சாரம்.. கைது.. ஆனாலும் அதிமுகவில் நீடிக்கும் மணிகண்டன்..! பின்னணியில் பவர் ஃபுல் தலைவர்?

By Selva KathirFirst Published Jun 22, 2021, 10:18 AM IST
Highlights

அமைச்சரான தன்னை கலந்து ஆலோசிக்காமலேயே உடுமலையை கேபிள் டிவி நிறுவன சேர்மனாக எடப்பாடி நியமித்ததை மணிகண்டன் ரசிக்கவில்லை. அத்தோடு கேபிள் டிவி சேர்மன் ஆன கையோடு தனது அதிகாரத்தை உடுமலை காட்டத் தொடங்கினார். இதனால் எரிச்சல் அடைந்த மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டி அளித்தார்.

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டாலே அதிமுகவில் நிர்வாகிகளாக இருப்பவர்களின் பதவிகளை பறிப்பது ஜெயலலிதா ஸ்டைல், இதனை அப்படியே எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்சும் தொடர்ந்து வந்த நிலையில் மணிகண்டனுக்கு மட்டும் விலக்கு கிடைத்துள்ளது எப்படி?

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவரது கட்டுப்பாட்டில் தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் இருந்தது. ஆனால் ஓபிஎஸ் இணைப்பிற்கு பிறகு கேபிள் டிவி சேர்மன் பதவியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அமைச்சரான தன்னை கலந்து ஆலோசிக்காமலேயே உடுமலையை கேபிள் டிவி நிறுவன சேர்மனாக எடப்பாடி நியமித்ததை மணிகண்டன் ரசிக்கவில்லை. அத்தோடு கேபிள் டிவி சேர்மன் ஆன கையோடு தனது அதிகாரத்தை உடுமலை காட்டத் தொடங்கினார். இதனால் எரிச்சல் அடைந்த மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டி அளித்தார்.

அன்று இரவே மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அரசில் அமைச்சர் பதவியை இழந்த ஒரே நபர் மணிகண்டன் தான். பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு முடியும் வரை மணிகண்டனால் மறுபடியும் அமைச்சராக முடியவில்லை. இந்த நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற பிரச்சனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அதிமுகவில் எழுந்தது. சுதந்திர தினத்தன்று கோட்டையில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றிய நிலையில் அங்கு முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பிரச்சனை எழ ஓபிஎஸ் கோபித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அமைச்சர்கள் சிலர் சென்று ஓபிஎஸ்சை சமாதானம் செய்தனர்.

இதன் காரணமாக மறுபடியும் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் என்று பேச்சுகள் எழுந்தன. அப்போது ஓபிஎஸ் ஆதவராளர்கள் வரிசையாக சென்று அவரை சந்தித்தனர். இந்தசமயத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார். மேலும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கட்சிக் கூட்டத்தில் அவர் குரல் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள்.  இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அந்த தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான மணிகண்டன் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களில் நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து தன்னை கர்ப்பமாக்கியதுடன் பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் தற்போது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினால் மணிகண்டன் மிரட்டுவதாக சாந்தினி அந்த புகாரில் தெரிவித்தார். இந்த புகார் வந்தது முதலே மணிகண்டன் தலைமறைவானார். விசாரணைக்கு பிறகு போலீசார் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் மணிகண்டன் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை. சாதாரண அடிதடி வழக்கில் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது தான் அதிமுகவின் பாலிசி.

ஆனால் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டும் மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் அதிமுக தலைமை அமைதியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது மணிகண்டனை போலீசார் கைது செய்த பிறகும் கட்சியில் அவர் நீடிக்கிறார். இதற்கு காரணம் ஓபிஎஸ் தான் என்கிறார்கள். மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்கவே கூடாது என்று ஒற்றைக்காலில் அவர் நிற்பதாக சொல்கிறார்கள். கைது நடவடிக்கைக்கு முன்னரே மணிகண்டனை கட்சியில் இருந்து நீக்க எடப்பாடி தரப்பு முயன்றதாகவும் ஆனால் அதற்கு ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். இந்த விவகாரத்தில் மணிகண்டனுக்கு ஓபிஎஸ் முழு ஆதரவு அளித்துள்ளதாகவும் எனவே தான் கைது செய்யப்பட்ட பிறகு போலீஸ் வாகனத்தில் ஏற்றும் போது மணிகண்டன் சக்சஸ் என்று கையில் சிக்னலை காட்டிவிட்டு செல்வதாகவும் கூறுகிறார்கள்.

click me!