
மம்தா தலைக்கு ரூ.11 லட்சம் விலை…கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் ‘கதகளி ஆடிய’ எம்.பி.கள்
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ஷனே தெரிவித்தார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இறுதிநாளான நேற்று எதிரொலித்து, கடும் அமளி ஏற்பட்டது. இரு அவையிலும் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டது.
ரூ.11 லட்சம்
மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் நடந்த அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியை அனுமதியின்றி நடத்திய பா.ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தையடுத்து, பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் யோகேஷ் வர்ன் விடுத்த அறிக்கையில், “ முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு ரூ.11 லட்சம்பரிசு அளிக்கப்படும்’’ என அறிவித்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பேச்சு நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. மக்கள் அவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதா ராய், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பேசுகையில், “ முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு பரிசு தருவதாக தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி என்பவர் முதல்வர் மட்டுமல்ல, இந்த அவையின் முன்னாள் உறுப்பினராகவும் அவர் இருந்தவர். இந்த பேச்சு மிகவும் தீவிரமானது, அவரின் நடத்தை ஆபத்தானது இதை அவை கண்டிக்க வேண்டும்’’ என்றார்.
இதை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. மல்லிகார் ஜூன கார்கே பேசுகையில், “ இதுபோன்று மிரட்டல் விடுத்து பேசும் நடத்தை கொண்டவர்களுக்கு எதிராக, அரசு கடுமையான செய்தியை தெரிவிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்று வலியுறுத்தினார்.
கண்டனம்
அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த குமார், “ இதுபோன்று யார் பேசி இருந்தாலும் அது தவறானது. இதை அரசு கடுமையாக கண்டிக்கிறது. மம்தா பானர்ஜி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு தலைவர். அவருக்கு மதிப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், “அரசியலில் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் ஒன்றாக இணைந்து நம்மை தரம் உயர்த்திக் கொள்ள வேண்டும்.’’ என்றார்.
மாநிலங்கள் அவை
மாநிலங்கள் அவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தபின் இந்த பிரச்சினையை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர்ராய் பேசுகையில், “ அரசமைப்பு சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட முதல்வர் மம்தாவை பேய் என்றும், தலையை வெட்டுபவருக்கு பரிசு எனக் கூறியதற்கும் இந்த அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும். மதத்தின் பெயரால் மேற்கு வங்காளத்தில் நடக்கும் தீவிரவாத ெசயல்களை மத்திய அரசு அழிக்க வேண்டும்’’ என்றார்.
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ இதுபோன்ற செயல்களையும், பேச்சுக்களையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த விவகாரத்தில் மாநில அரசு தகுந்த சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.’’ என்றார்.
சட்டப்படி நடவடிக்கை
அவையின் துணைத்தலைவர் பி.ஜே. குரியன் பேசுகையில், “ இதுபோன்று பேசும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து, சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
பிறந்தநாள் வாழ்த்து...
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு நேற்று 73-வது பிறந்தநாளாகும். அவை கூடியதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒட்டுமொத்த அவையும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.