
தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டு தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை முருகன் தெரிவித்தார்.
திமுக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திருச்சி சிவா எம்.பி., ஆலந்தூர் பாரதி ஆகியோர் இன்று மும்பையில் உள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை சந்தித்தனர்,
அவரிடம் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல், ரத்து செய்யப்பட்டது குறித்து பேசினர். மேலும் தமிழக அரசை உடனடியாக டிஸ்மிஸ் பண்ண வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து சென்னை திரும்பிய துரைமுருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் முறைகேட்டில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தாக தெரிவித்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதையும் ஆளுநரிடம் தெரிவித்தாக குறிப்பிட்டார்.
தமிழக முதல்வரே தலைமை தாங்கி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருப்பது ஜனநாயக படுகொலை என சுட்டிக்காட்டிய துரைமுருகன், அந்த ஆவணங்களில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக துரைமுருகன் தெரிவித்தார்.
தங்களது கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட ஆளுநர் 2 நாளில் சென்னை வரவிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தாகவும் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.