ஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..!

By Thiraviaraj RMFirst Published Nov 24, 2020, 5:27 PM IST
Highlights

சுவேந்து திடீரென தூக்கியிருக்கும் இந்த போர்க்கொடிக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தமிழகத்தில் திமுக ஐபேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதை போல மேற்கு வங்கத்தில் மம்தாவும் பிகேவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

திமுக பிகே டீமுடன் வெளியிலிருந்து விமர்சனங்கள் எழுந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியது. ஏனெனில் கட்சித் தலைமை மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுவதை கேட்காமல் யுத்தி வகுக்கும் நிறுவனத்தின் ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக்கொள்வது சலசலப்புக்கு காரணமாக அமைந்தது. மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஐபேக் நிறுவனத்திற்கு தரப்படும் முக்கியத்துவம் குறித்து ஸ்டாலினிடம் வெளிப்படையாகவே விமர்சித்துப் பேசினார்.

கட்சி நிர்வாகிகளையும் ஐ பேக் நிறுவனத்தையும் ஒரே சமயத்தில் சமாளித்து செல்வதே ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைவிட மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு தான் பெரிய திண்டாட்டமாக அமைந்துவிட்டது. ஐபேக் நிறுவனம் கூறியபடி மம்தா கட்சிக்குள்ளும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பலரை பதவிகளிலிருந்து தூக்கியுள்ளார். இது கட்சி உயர்மட்டத் தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடி ஐபேக்கின் சேவையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் எனப் பலரும் மம்தாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளனர். இவர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி. மேற்கு வங்கத்தில் 45 தொகுதிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவராக உள்ளார். 18 மாவட்டங்களில் இவரது ஆதரவாளர்களே உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

ஐ பேக் ஆலோசனையைக் கேட்டு சுவேந்து அதிகாரி ஆதரவாளர்கள் மாற்றப்பட்டதால் அவர் மம்தா மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியிலிருந்து இவர் விலகவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அக்கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். சுவேந்து திடீரென தூக்கியிருக்கும் இந்த போர்க்கொடிக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுவேந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கினாலோ, அல்லது பாஜகவில் இணைந்தாலோ மம்தாவுக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். அத்துடன் பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிப்பது மிக எளிதானதாக மாறும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைவான இடங்களை பாஜக பெற்றிருந்தாலும் மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸைவிட அதிக இடங்களைப் பெற்று தனது பலத்தை நிரூபித்தது. இதனால் மம்தா பானர்ஜி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார். அந்தவகையில் அதிருப்தியாளர்களை அவர் கையாளும் விதத்தில்தான் மேற்கு வங்கத் தேர்தலின் முடிவு அமையும் என்கிறார்கள் 

click me!