சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் துரை வைகோ அவர்கள் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு அப்போதைய அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமியிடம் நான் அவரிடம் பேசியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.
துரை வைகோ தேர்தலில் போட்டி
சட்டமன்ற தேர்தலின் போது சாத்தூர் தொகுதியில் துரை வைகோ போட்டியிட தொகுதி ஒதுக்கும் படி திருப்பூர் துரைசாமியிடம் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆவது தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து களம் கண்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளை கேட்டுப் பெற தலைவர் வைகோ அவர்கள் என்னுடைய தலைமையில் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து,
ஆட்சி மன்ற குழு கூட்டம்
நான்கு கட்ட பேச்சு வார்த்தையின் இறுதியில் மதிமுக போட்டியிட மதுராந்தகம், அரியலூர், மதுரை தெற்கு, சாத்தூர், பல்லடம் ,வாசுதேவநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கீடு செய்தது. இந்த ஆறு தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கழக வேட்பாளர்களை தேர்வு செய்ய கழகத்தின் ஆட்சி மன்றக் குழு கூடி ஜனநாயக முறையில் யார் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் எளிதாக இருக்கும் என்பதை தீவிரமாக பரிசீலித்து ஆறு தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட டாக்டர் ரகுராமன் அவர்களை ஆட்சி மன்ற குழு தேர்வு செய்தது.
உண்மைக்கு புறம்பானது
உண்மை இவ்வாறு இருக்க, சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் தலைவர் திரு வைகோ எம்பி அவர்களின் மகன் சகோதரர் திரு துரை வைகோ அவர்கள் போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு அப்போதைய அவைத்தலைவராக இருந்த திரு திருப்பூர் துரைசாமி அவர்களிடம் இசைவைப் பெற நான் அவரிடம் பேசியதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் இன்றைய நாளிதழ்களில் செய்தி வந்திருப்பது உண்மைக்குப் புறம்பானது. இதில் சிறிதும் உண்மை இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்வதாக மல்லை சத்யா கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்