ஸ்டாலின் பதவியேற்றதும் முதலில் இதை கவனியுங்கள்... கமல் ஹாசன் வைத்த அதிரடி கோரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 06, 2021, 03:19 PM IST
ஸ்டாலின் பதவியேற்றதும் முதலில் இதை கவனியுங்கள்... கமல் ஹாசன் வைத்த அதிரடி கோரிக்கை...!

சுருக்கம்

நாளை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவருக்கு அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.   

தமிழகத்தில் கொரோனா தொற்றின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரியணை ஏற உள்ளது. நாளை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் அவருக்கு அதிரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொள்ளை நோய் பரவும் பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாக செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். 

எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.உதாரணமாக, நுரையீரல் தொற்று எந்தளவிற்கு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ.1500/-ல் துவங்கி ரூ.8,000/- வரை விதம் விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/- துவங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.

ஒரு மருத்துவரின் சேவைக்கான கட்டணம் அவரது கல்வி, அனுபவம். திறமை பொருத்து மாறுபடலாம். நோயாளிகள் எதிர்பார்க்கும் லக்ஸூரியைப் பொருத்து அறை கட்டணம் மாறுபடலாம். ஆனால், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள்,தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டணங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.

அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திரு. மு.க. ஸ்டாலின் இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!