தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் கமல்ஹாசன் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாநில தலைமையகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கட்சிக்கட்டமைப்பை வலுப்படுத்துவது, முன்னெடுத்துச் செல்லவேண்டிய களப்பணிகள் குறித்துத் தலைவர் அவர்கள் விரிவாக உரையாற்றினார்.
அப்போது உரையின் இறுதியில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்தோடு பல கட்டங்களாக தமிழகமெங்கும் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்க விரும்புவதாகவும், அந்த சுற்றுப்பயணத்திற்கான திட்டமிடலை விரைவுபடுத்தவும் நிர்வாகிகளை வலியுறுத்தினார். கட்சிக் கட்டமைப்பை கூடுதல் கவனத்தோடு வலுப்படுத்த வேண்டிய மாவட்டங்களை நோக்கி முதலில் பயணிப்போம் என்று மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு.. பாஜக கட்சிகாரர் என்றால் கைது செய்வீங்களா? திமுகவை கிழித்த அண்ணாமலை
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் மக்கள் நீதி மய்யத் தலைவரின் சீரிய முயற்சியால், தமிழகத்தில் 26 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நகர்ப்புறப் பகுதிகளுக்கான ஏரியாசபை குறித்தான அறிவிப்பானது வரவேற்கத்தக்கது. அதிகாரிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள இச்சட்டத்தினை மேலும் மேம்படுத்தி மக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் சீர்படுத்திச் செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படவேண்டும் என்று தமிழகத்தில் முதல் குரல் எழுப்பியவர் நமது தலைவரே. பல கட்சிகள் நம் தலைவரின் கருத்தைக் காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டது. ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் திமுகவும் இவ்வாக்குறுதியைக் கொடுத்திருந்தது. இதுநாள்வரை இந்த வாக்குறுதி செயல்படுத்தப்படவில்லை. ஆளுங்கட்சியான திமுகவானது விரைவில் பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சியானது கணிசமான வெற்றியைப் பெறுவதை உறுதிசெய்திடும் வகையில், மாநில, மண்டல, மாவட்ட பொறுப்புகள் தொடங்கி பூத் கமிட்டி வரையிலான பொறுப்புகள் அனைத்தும் நியமிக்கப்படுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் கடுமையாக உழைத்திட வேண்டும்.
6-ம்வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த பெண்கள், கல்லூரியில் சேரும்போது, அவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1000 கொடுப்பதாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டமானது வரவேற்புக்குரியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக, தமிழகத்தின் நீராதார உரிமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுஅணையை கட்டுவதற்கு கர்நாடகமானது தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவருவதைக் கண்டிக்கிறோம்.
மேலும் செய்திகளுக்கு.. எடப்பாடி பழனிசாமி எடுத்த புது அஸ்திரம்.. ஓபிஎஸ் நிலைமை பாவம்.. புலம்பும் அதிமுக ஆதரவாளர்கள்!
இந்த விவகாரம் காரணமாக மூன்றுமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டமானது அடுத்தமுறை கூடும்போது, மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நல்ல விளைச்சல் இருந்தும் போதிய நெல்கொள்முதல் நிலையங்கள் இல்லாததாலும், இருக்கும் நிலையங்களில் உரிய வசதிகள் இல்லாததாலும், கொள்முதல் நிலையங்களில் நடக்கும் குளறுபடிகள் காரணமாக விவசாயிகள் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
விரைவில், தமிழகமெங்கும் உரிய வசதிகளோடு கூடிய நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இலஞ்ச - ஊழலற்ற அரசு நிர்வாகத்திற்கு வழிவகுத்து, பொதுமக்களுக்கு விரைவில் அரசு சேவைகளைப் பெற்றுத்தருவதற்கான சேவை பெறும் உரிமைச் சட்டமானது தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஊழல் வழக்குகளை விசாரித்துவரும் இலஞ்சஒழிப்புத் துறையானது ஊழலுக்குத் துணைபோன ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் அனுமதி கோரி, அது 8மாதமாக நிலுவையில் உள்ளது கண்டனத்திற்குரியது. தமிழக அரசானது, உரிய அனுமதியை விரைந்து தரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், மாற்றுக் கருத்து கொண்டோரின் ட்விட்டர் பக்கங்களை முடக்க முற்படும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம்.
தமிழகத்திலுள்ள சுங்கச் சாவடிகளை படிப்படியாகக் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்துதரப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
தமிழகமானது மாநிலக் கல்விக் கொள்கையை வரையறுப்பதற்கான முன்னெடுப்புகள் செய்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவானது, தமிழ் மொழியின் தொன்மை மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை உள்ளடக்கிய கல்விக்கொள்கையை தமிழகத்திற்கு வழங்கிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!