
அ.தி.மு.க.வில் பிளவுபட்ட இரண்டு அணிகளும் இணையும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் துவக்கப்பட்டதும், அதில் இரு தரப்பை சேர்ந்தவர்களின் முரண்டு மற்றும் முரண்பாடுகளினால் தொய்வு விழுந்து கொண்டே இருப்பதும் தெரிந்த கதை.
இணைப்பு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று சொல்லப்பட்டு வரும் நிலையிலேயே பரஸ்பரம் இரண்டு தரப்புகளும் ஒன்றை ஒன்று விமர்சன வாளால் வெட்டிக் கொள்கின்றனர்.
அந்த வகையில் இன்று மைத்ரேயன் ஒரே போடாக போட்டுத் தள்ளி இருக்கிறார். அதாவது ‘’தடியெடுத்தவென்ல்லாம் தண்டல்காரன் என்பது போல் இந்த ஆட்சியில் அமைச்சர்கள் அவரவர் இஷ்டம் போல் செயல்படுகிறார்கள். பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டும், பண முறைகேடு, மிரட்டல் குற்றச்சாட்டுகளும் தினமும் வெடிக்கின்றன.
அந்த ரீதியில் பார்த்தால் இந்த ஆட்சி தனது செயல்களாலேயே கவிழும் என்றே தெரிகிறது. அதாவது 'It will fall on its own weight' என்று தான் தமிழில் கூறியதை மீண்டும் இங்கிலீஸில் மொழிபெயர்த்து மேஜர் சுந்தர்ராஜன் போல் பேசியிருக்கிறார்.
கூடவே ‘பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக எடப்பாடி அணியினர் கூறி வருகிறார்களே!’ என்று கேட்டதற்கு ‘அப்டியா? அது எங்கே நடக்குதுன்னு சொல்லச் சொல்லுங்க.’ என்று எடக்காக கேட்டிருக்கிறார்.
ஆக ‘எடப்பாடியின் ஆட்சி சரியும்’ என்று மைத்ரேயன் மை போட்டிருப்பது எந்த நம்பிக்கையில், தைரியத்தில், கால்குலேஷனில்? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.