
எடப்பாடி அணியுடன் ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வம் சேரக்கூடாது என்ற அ.தி.மு.க.புரட்சி தலைவி அம்மா அணி அமைப்புச் செயலாளர் செம்மலை ஐடியா கொடுத்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க.புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா, கட்சி வளர்ச்சி குறித்த பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புச் செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ. பேசியது:
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்னை தற்காலிக சபாநாயகராக ஆக்கியது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க கூடாது என்ற 2 கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை அவர்கள் பதில் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி அணியினர் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடுகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதாவது, உங்களை முதலமைச்சராக தேர்ந்தெடுத்த முறை சரியான முறையா? உங்களை இலட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? என்பதற்கு பதில் கூறுங்கள்.
அமலாக்க பிரிவு துறையினரால் தினகரன் கைது செய்ததை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.
கடந்த வாரம் தேர்தல் ஆணையம் மாநில கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் பெயர்களை பட்டியலிட்டது. அதில் அ.தி.மு.க.வின் இடம் காலியாக உள்ளது. சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையமே அங்கீகரிக்கவில்லை. பின்னர், அவரால் நியமிக்கப்பட்ட துணை செயலாளர் பதவி எப்படி செல்லும். இவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதலமைச்சர் பதவி எப்படி செல்லுபடியாகும்.
தங்களை பாதுகாத்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம் என்ற முகமூடி அவர்களுக்கு தேவைப்படுகிறது. அதற்கு நீங்கள் ஒருபோதும் துணைபோக கூடாது. தொண்டர்கள் விருப்பப்படி ஒருபோதும் அந்த அணியினருடன் சேரக்கூடாது” என்று அவர் பேசினார்.