அண்ணாமலை பின்னால் ஒட்டுமொத்த பிராமணர்கள்.. சூழ்ச்சியில் சிலர்.. வேதனையில் மைத்ரேயன்

By Ajmal Khan  |  First Published Jun 27, 2023, 2:29 PM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ தமிழ்நாட்டில் பிராமணர்களை புறக்கணிக்கிறார்கள் என்பது திசை திருப்பும் முயற்சி. திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி.  இதில் சில பிராமணர்கள் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 
 


பிராமணர்களை புறக்கணிக்கிறாரா.?

அதிமுகவில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மைத்ரேயன், அதிமுகவில் இருந்து விலகி கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக செயல்படுவதாக எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நான் எப்போதும் ஜாதி, மத பாகுபாடு பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது, பழகுவது கிடையாது. என்னோடு பழகிய அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும்.

Tap to resize

Latest Videos

ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் பாரதிய ஜனதா கட்சியில் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பிராமணர்களை புறக்கணிக்கிறார் என்று திட்டமிட்ட ரீதியில் வதந்தி பரப்புகின்றனர்.  நான் பிராமண சங்க அமைப்பினருடனும்  பரவலாக மாநிலம் முழுக்க பிராமணர்களோடும் நல்ல தொடர்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். 

அண்ணாமலைக்கு தான் ஆதரவு

பலர் என்னிடம் பேசி வருவதில் இருந்து ஒரு தெளிவான கருத்து வெளிப்படுகிறது. தமிழ்நாட்டில் பிராமணர்களின் ஒட்டுமொத்த ஆதரவு திரு அண்ணாமலை அவர்களுக்குத் தான்.  திரு அண்ணாமலை அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை, புதிய எழுச்சியை ஏற்படுத்த முழு மூச்சுடன், ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார். எனவே அவர்மீது உள்ள நம்பிக்கையினால் தமிழ்நாட்டில் பிராமணர்கள் திரு. அண்ணாமலை அவர்கள் பின்னால் பெருமளவில் அணி திரண்டு நிற்கிறார்கள்.  திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசில் இரண்டு முக்கிய துறைகளில் தமிழக பிராமணர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்  - நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர். 

சில பிராமணர்கள் ஈடுபடுவது வேதனை

எனவே ஏதோ பாஜகவோ, தலைவர் அண்ணாமலையோ தமிழ்நாட்டில் பிராமணர்களை புறக்கணிக்கிறார்கள் என்பது திசை திருப்பும் முயற்சி. திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி.  இதில் சில பிராமணர்கள் ஈடுபடுவது வேதனை. ஆனால் தமிழ்நாட்டு பிராமணர்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாக மாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு பிராமணர்கள் ஜாதி பார்த்து வாக்களிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு நன்றாகத் தெரியும் - நரேந்திர மோடி பிராமணர் அல்ல, அண்ணாமலை பிராமணர் அல்ல என்று.  ஆனால் மோடியும் அண்ணாமலையும் நேர்மையானவர்கள், நியாயமான நல்லாட்சி தருவார்கள் என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

அண்ணாமலைக்கு பின்னால் பிராமணர்கள்

தமிழ்நாட்டு பிராமணர்களுக்காக பகிரங்கமாக குரல் கொடுத்த ஒரே அரசியல் தலைவர் அண்ணாமலை மட்டும் தான் என்பதை அவர்கள் நன்றியோடு நினைக்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்நாட்டு பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக அண்ணாமலை அவர்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் தமிழக பிராமணர்கள் விரும்புவது மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமையும் போது அதில் தமிழகத்தின் பங்கும் இருக்க வேண்டும் என்பது தான். நமது ஒற்றை இலக்கு தமிழ்நாட்டிலிருந்து மோடிக்கு ஆதரவாக 25 எம்.பிக்கள் என மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சிதம்பரம் கோயிலை சொந்த நிறுவனமாக நினைக்கும் தீட்சிதர்கள்.! அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை-சேகர்பாபு

click me!