பாஜக.,வில் இருந்தபடியே அதிமுக.,வுக்கு அடித்தளம் அமைத்து எதிர்காலத்தைத் தேடிக் கொண்டவர்... நினைவலைகள் பேசும் அரசியல்!

First Published Dec 1, 2017, 7:29 PM IST
Highlights
maithreyan shares his past memories with jayalalitha in facebook post


அதிமுக., எம்பி., வா.மைத்ரேயன் இப்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறார். அத்தகைய முக்கியத்துவம் அவருக்குக் கிடைக்க அதிமுக., முன்னர் அமைந்தது என்றால், இப்போது ஓபிஎஸ் அணியின் பின்னணியும், அதை இயக்கிக் கொண்டிருப்பவர் என்ற முத்திரையும் காரணம் ஆகி விட்டது. 

ஓபிஎஸ்., ஈபிஎஸ் அணிகள் மன ரீதியாக ஒத்துப் போகவில்லை என்று ஒரு பேஸ்புக் போஸ்ட் போட்டார். அது உடனே தலைப்புச் செய்தி ஆகிவிட்டது. 

ஏதோ ஒரு பணியாக ஆளுநரைச் சந்திக்கச் சென்றார். அது, ஏதோ இரு அணிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டது போலும், அதற்காக ஆளுநரைச் சந்திக்கச் செல்கிறார் என்றும் ஒரு கருத்தைக் கிளப்பி விட்டது.

இந்த நிலையில், புதிதாக ஒரு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளார் மைத்ரேயன். அன்றைய நாளில் அவர் தன் தாய்க் கட்சியான பாஜக.,வில் இருந்த போது, ஜெயாலலிதா வீட்டில் நடத்தப் பட்ட சோதனை, அவர் கைது செய்யப்பட்டது இவற்றுக்கெல்லாம் சேர்த்து வைத்து கண்டன அறிக்கையை எழுதினார். அதுவும் பாஜக.,வின் கட்சி லெட்டர் பேடில். 

அதனை இப்போது வெளிப்படுத்தியுள்ள மைத்ரேயன், தான் பாஜக.வில் இருந்து கொண்டே, அதிமுக.,வுக்கு அச்சாரம் போட்ட கதையை பேஸ்புக்கில் எழுதியுள்ளார்... அந்த லெட்டர் பேடுடன்! இப்போது அதிமுக.,வில் ‘அம்மா’  கருணையில் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள அந்த லெட்டர் உதவியது என்பதை நன்றி மறக்காமல் அவர் குறிப்பிட்டுள்ளது... இங்கே! 
***
டிசம்பர் மாதம் பிறந்து விட்டது. வரும் 5 ம் தேதி அம்மா அவர்கள் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. நான் எனது நினைவுகளை 21 ஆண்டுகளுக்கு பின்னோக்கி எடுத்துச் செல்கிறேன். 1996 ம் ஆண்டு நான் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர். 

டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வழக்கம் போல் விடிந்தது. அனைவரும் அவரவர் வேலைகளில் இருந்தனர். திடீரென்று தொலைக்காட்சிகளில் ப்ரேக்கிங் நியூஸ்.

திமுக அரசின் காவல்துறை அம்மா அவர்களின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று அம்மா அவர்களை கைது செய்தது. தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் அதை வரவேற்றனர். வைகோ, சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் அம்மா அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூட அறிக்கை விட்டனர். 

அப்போது அம்மா அவர்களின் கைதைக் கண்டித்து முதல் அறிக்கை கொடுத்தது நான் தான். அம்மா அவர்களின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டன அறிக்கை வெளியிட்டேன். அன்று இரவு தொலைக்காட்சி செய்திகளிலும் 8 ஆம் தேதி நாளிதழ்களிலும் எனது கண்டன அறிக்கை முக்கிய செய்தியாக வந்தது. 7 ம் தேதி இரவு பாஜக தேசியத் தலைவர் அத்வானி அவர்களிடம் கூறினேன். அவரும் எனது அறிக்கை சரியானது என்று ஆமோதித்தார். 

8 ஆம் தேதி காலை திருமதி சுலோசனா சம்பத் அவர்கள் அம்மா அவர்களை சென்னை மத்திய சிறையில் சந்தித்த போது அம்மா அவர்கள் "மைத்ரேயன் அறிக்கையை படித்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவரை சந்திக்கிறேன் "என்று என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னார். 

1996 டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கை வரும் காலங்களில் எனது அரசியல் வாழ்க்கையை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அன்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

click me!