
கட்சிக்காக என்னென்ன செய்தேன் என்பது ஜெயலலிதாவிற்கு தெரியும் எனவும், ஜெயக்குமார் போன்றோருக்கு தெரியவில்லை என்றால் அதைப்பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிளவு பட்டு கிடக்கும் நிலையில், இரு அணிகளின் பேச்சுவார்த்தையை அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் அதிமுகவின் அணிகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு அவர்களே மாறி மாறி சாடி கொண்டு முட்டுக்காட்டி போட்டு வந்தனர்.
இதையடுத்து எடப்பாடியும், ஒ.பி.எஸ்சும் பேச்சுவார்த்தைகள் குறித்து தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று தங்கள் தரப்பினருக்கு வரைமுறைகள் விதித்தனர்.
ஆனால் இரு அணிகளின் தலைவர்களான அவர்களே பொது இடத்தில் ஒருவரையொருவர் கடிந்து கொண்டனர்.
அதனால் தற்போது இரு அணிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் வசை பாட ஆரம்பித்து விட்டனர்.
இதன் ஒரு பகுதியாக ஒ.பி.எஸ் ஆதரவாளர் மைத்ரேயன் எம்.பி 2021 வரை அதிமுக-வின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறும், ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரின் அணியில் உள்ளவர்கள் பொறுப்பில் நீடிக்க மாட்டார்கள் என கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், கட்சிக்காக அடி, உதைகள் பட்டு சிறைகள் சென்று தியாகம் செய்த உண்மைத் தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால் மைத்ரேயனின் கருத்து வேடிக்கையானது என கூறினார்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் இந்த ஆவேச பதிலுக்கு மைத்ரேயன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், கட்சிக்காக என்னென்ன செய்தேன் என்பது ஜெயலலிதாவிற்கு தெரியும் எனவும், ஜெயக்குமார் போன்றோருக்கு தெரியவில்லை என்றால் அதைப்பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.