
சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக எடப்பாடி தரப்பினர் தொடர்நது நாடகமாடுவதாக ஓபிஎஸ் அணி எம்.பி. மைத்ரேயன் தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கி வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை நிறைவேற்றினால் இரு அணிகளும் இணையலாம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணி இணைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இரு அணி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது அத்து மீறி பேசுவதாகவும் புகார் எழுந்ததது.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன் எம்.பி., இரு அணிகள் இணைப்பு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்தார்.
ஆனால் சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்தது நீக்கிவிட்டதாக எடப்பாடி தரப்பினர் நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். எடப்பாடி தரப்பினர், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் சசிகலா மற்றும் தினகரன் பெயர் இடம் பெற்றிருந்ததை மைத்ரேயன் சுட்டிக்காட்டினார்.
தங்கள் அணி விதித்துள்ள முக்கியமான 2 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் மைத்ரேயன் உறுதிபடத் தெரிவித்தார்