
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள், அடுத்தடுத்து கார் விபத்தில் சிக்குவதும், உயிரிழப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாடு காவலாளி கொலை வழக்கில், சந்தேகத்திற்கு ஆளான, ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர்.
இன்று காலை அவர் தென்னங்குடிபாளையம் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான கார், கர்நாடக பதிவு எண்ணை கொண்டுள்ளது, அதனால், சம்பந்தப்பட்ட கார் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் கனகராஜ், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மூளையாக செயல் பட்டவர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, டிரைவர் கனகராஜை விசாரிப்பதற்காக சேலம் வரும் நிலையில், டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்திருப்பது, பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் மற்றொருவரான கேரளாவை சேர்ந்தவரும், டிரைவர் கனகராஜின் நண்பருமான சயா என்பவர், இன்று காலை கார் விபத்தில் சிக்கி பாலக்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் சயானின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதும், சயா கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதும், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இவை தற்செயலான விபத்துக்களா? அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.