
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவாகப் பேசி வரும் நாஞ்சில் சம்பத்துக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிமுகவில் இருந்த போது கருப்புத் துண்டோடு மேடைகளில் அடுக்கு மொழிகளில் பேசி கலக்கி வந்தவர் நாஞ்சில் சம்பத். இவரது நாவில் இருந்து வரும் அழகு தமிழைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கானோர் குவிவர்.பின்னாளில் வைகோவுடன் ஏற்பட்ட பிணக்கால் மதிமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் ஐக்கியமானார்.
நாஞ்சில் சம்பத்தின் பணிகளைப் பாராட்டி அவருக்கு இன்னோவா காரை பரிசாக வழங்கினார். விதி வலியதே சும்மா விடுமா என்ன? பேச்சுத் திறனால் உச்சத்திற்குச் சென்ற நாஞ்சில் சம்பத் அதே திறமையாலும் அடிமட்டத்திற்குச் சென்றார். ஜெயலலிதா குறித்து ஊடகங்களில் இவர் பேசியது பெரும் சர்ச்சையாக வெடிக்க அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து பந்தாடப்பட்டார்.
இதோடு விட்டாரா? அம்மா வழங்கிய இன்னோவா காரை திரும்ப ஒப்படைத்து பின்னர் அதை மீண்டும் பெற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் சில நாட்கள் தமிழருவி மணியனோடு மல்லுக்கட்டி வந்த நாஞ்சில் சம்பத்தின் நாவு தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சுழண்றடிக்கத் தொடங்கியுள்ளது.
டிடிவி தினகரனை காப்பாற்ற எந்தவிலையும் கொடுக்கத் தயார். அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற இவரின் சமீபத்திய அதிரி புதிரி தொலைக்காட்சிப் பேட்டிகள் அடடே ரகம்...
டிடிவி.தினகரனை வானளாவிய அளவுக்கு புகழும் நாஞ்சில் சம்பத் மீது எப்போது வழக்குகள் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு தமிழக அரசின் சார்பில் வீடு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்டினப்பாக்கத்தில் உள்ள ஒரு அரசு குடியிருப்பை நாஞ்சிலுக்கு வழங்க இருப்பதகாவும் கூறப்படுகிறது.
இன்னும் எதுவெல்லாம் நடக்கப் போகிறதோ..........!