
ஆர்.கே.நகரில் போட்டியிடவும், வாக்குகள் கேட்கவும் ஜெயலலிதாவின் நம்பிக்கை பாத்திரமான ஓ. பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே தகுதி உள்ளது என அவரது ஆதரவாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெற்று அசாதாரண சூழ்நிலையில், சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் உச்சகட்ட வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா மரணம் குறித்து ஒ.பி.எஸ் தரப்பினர் அடிக்கடி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறன்றனர்.
இதனிடையே ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேலைபாடுகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இதுவரை தீபா அணியும், விஜயகாந்த் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
மேலும் திமுக வேட்பாளருக்கான நேர்காணல் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் ஒ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
ஆர்.கே.நகரில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து 4 நாட்களில் அறிவிக்கப்படும்.
இன்னும் 2 நாட்களில் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அம்மாவின் நல்லாட்சி தொடர ஒ.பி.எஸ் அணி தொடர்ந்து வழிவகுப்போம்.
எந்த பொறுப்புகளும் இல்லாதவர் டி.டிவி என நாங்கள் சொல்வதை விட தேர்தல் ஆணையமே சொல்லியுள்ளது. அதனால் அவர் பேச்சுக்களை கருத்தில் கொள்ள தேவை இல்லை.
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஒ.பி.எஸ் மட்டுமே ஆர்.கே.நகரில் வாக்கு கேட்க தகுதி உடையவர்.
அனைவரும் ஒரு குடும்பமாக ஒ.பி.எஸ் தலைமையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.