
ஆட்சியில் இருந்த போது எதுவும் செய்யாத திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இப்போது மீனவர்களைப் பற்றி பேச தகுதி இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர் பிரிட்ஜோ என்பவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சிமட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் சென்று மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இதனிடையே திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் மீனவர்களை சந்தித்து பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது பேசிய ஸ்டாலின் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
மேலும் இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றும் மத்திய அரசு சார்பில் இதுவரை இலங்கை கடற்படையை கண்டிக்கவோ தட்டி கேட்கவோ இல்லை எனவும், கச்சத்தீவை மீட்பதுதான் இதற்கு ஒரே வழி. அதற்கான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மதுரையில் செய்தியார்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எத்தனை முறை மீனவர்கள் பற்றி பேசி உள்ளனர்?
இவர்கள் ஆட்சியின்போது தான் தமிழக மீனவர்கள் 500 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
திமுக எம்.பிக்கள் 12 பேர் மத்தியில் இருந்தும் மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து என்ன நடவடிக்கை எடுத்தனர்.
இலங்கை கடற்படையால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள 385 படகுகளை மீட்க இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜ.க அமைச்சர்கள் மீனவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளோம். இனி மீனவர்கள் தாக்கபடாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்போம்.
மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத திமுகவுக்கும் காங்கிரசுக்கும் மீனவர் நலன் குறித்து பேச தகுதி இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.