
பாஜக புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் ஒன்றைர வருடங்களே உள்ள நிலையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக தலைமை நியமித்தது. இதே போல மாநில நிர்வாகிகளையும் நியமித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரம் காட்டியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் , புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற, கிளை அளவில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கினர். மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி மத்திய அரசின் திட்டங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அப்போது நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கப்பட்டது.
பாஜகவினர் மீது வழக்கு பதிவு
இதனியடையே பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்த மூத்த தலைவர்களை வரவேற்க்கும் விதமாக மதுரையில் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து உரிய அனுமதியில்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக கூறி மதுரை மாநகராட்சி நிர்வாகம் பேனர்களை அகற்றியது இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேனர்களை அகற்றியதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்திலும் பாஜகவினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விதிமுறைகளை மீறியதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மதுரை மாவட்ட மாநகர் பாஜக தலைவர் டாக்டர். சரவணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல 25 பாஜக நிர்வாகிகள் மீதும் அனுமதியில்லாமல் பேனர் வைத்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மதுரை பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.