
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ள அதே நேரம் தமிழகத்தில் ஆட்சிக்கு பங்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஆளும் கட்சியினர் பயந்து நடுங்கி வருகின்றனர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மதுரையில் தீ விபதது ஏற்படும் என்றும், மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. கோவிலில் கடந்த 2 ஆம் தேதி பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
சுமார் 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்தனர். உடனே அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலானது. அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்தன.
இந்த தீ விபத்தால் கலங்கிப்போன பக்தர்கள் மதுரைக்கு என்ன நடக்கப் போகிறதோ என அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அரசியல்வாதிகளும், ஆளுங்கட்சியினரும் பதற்றத்தில் உள்ளனர்.
உடனடியாக இதற்கு பரிகாரம் பண்ண வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் பாதிப்பு என்று என்று பஞ்சாங்கத்தில் கணிப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று சித்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் மதுரையில் தீ விபத்து ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.பஞ்சாங்கம் கணித்துள்ள இந்த தகவல் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என பஞ்சாங்க கணிப்பில் கூறியிருந்தது அப்படியே நடந்தது. தற்போது தீ விபத்து குறித்து வெளியிடப்பட்ட கணிப்பும் நடந்துள்ளதால் பக்தர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.