
உள்ளாட்சித் தேர்தலில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதையடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் அணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரம் மாநில தேர்தல் ஆணையத்துக்குத்தான் உள்ளது. எனவே இதில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது.
எனவே தினகரனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசை மீறி மாநில தேர்தல் ஆணையம் செயல்படாது என்பதால், ஆட்சியாளர்கள் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க விடமாட்டார்கள் என்பதால் தினகரன் கலக்கத்தில் உள்ளார்.