கழகத்திற்கு அவப்பெயர்.. திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 8, 2021, 12:45 PM IST
Highlights

கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

மதுரை வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகர் அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பேக்கரியில் ஆயுதத்துடன் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, மேஜை, இருக்கைகளை தூக்கி வீசி சேதப்படுத்தினார். மேலும், அந்த வளாகத்தில் இருந்த அரசு வங்கி ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி, வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் அசோக் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். திமுக வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாசத்தின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பி.பிரகாசம், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

click me!