இந்த திட்டத்தை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்... முதல்வருக்கு டிடிவி.தினகரன் கோரிக்கை..!

By vinoth kumarFirst Published Jun 8, 2021, 12:03 PM IST
Highlights

தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைத்து எந்த காரணம் கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக காட்டுயிர் அனுமதி கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 2010ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சி நடக்கிறது. இது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் திட்டம் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த சூழலில் இந்த திட்டத்தினால் காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது என்றும் ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ, தினகரன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்காக காட்டுயிர் அனுமதி (Wildlife Clearance) கேட்டு அளிக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வனத்துறை அனுமதியையும் ரத்து செய்ய வேண்டும். நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைத்து எந்த காரணம் கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

click me!