அடுக்கடுக்கான பாலியல் புகார்.. ஒட்டு மொத்த ஆண் ஆசிரியர்களையும் அவமதித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!

By Selva KathirFirst Published Jun 8, 2021, 11:18 AM IST
Highlights

ஒட்டு மொத்த ஆண் ஆசிரியர்களையும் கிட்டத்தட்ட கேவலப்படுத்தியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.


சென்னை அசோக் நகர் பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகாரை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளிலும் முன்னாள், இன்னாள் மாணவிகள் தொடர்ந்து பாலியல் புகார்களை தெரிவித்து அதிர வைத்து வரும் நிலையில் அதற்கு தீர்வு என்று கூறி ஒட்டு மொத்த ஆண் ஆசிரியர்களையும் கிட்டத்தட்ட கேவலப்படுத்தியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள் மட்டும் அல்லாமல் ஈரோடு, நாமக்கல் போன்ற நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் புகார் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். அதிலும் கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தற்போது பாடம் நடத்தப்படுகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட அவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறிக் கொண்டு ஆசிரியர்கள் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, ஆபாச மெசேஜ் அனுப்புவது என எல்லை மீறி வருகின்றனர்.

இதனை தடுக்க ஆன்லைன் வகுப்புகளுக்கு என்று சில வழிமுறைகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்டது. அத்தோடு மேலும் சில வழிமுறைகளை வெளியிட்டு அதனை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டு தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாணவிகளுக்கு பாலியல் புகார்கள் தொடர்ந்து வருவதால் மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க பெண் ஆசிரியைகளை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ்.

உண்மையில் இது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் செயல். மேலும் ஆண் ஆசிரியர்கள் என்றாலே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பார்கள், தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் பார்வை இருக்கும் என்கிற தொனியில் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். உண்மையில் தவறு செய்யும் ஆசிரியர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் இந்த பிரச்சனைக்கு உண்மையான தீர்வாக இருக்கும். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபனம் ஆனால் அந்த ஆசிரியரை உடனடியாக பணி நீக்கம் செய்வதுடன் வேறு எங்கும் ஆசிரியர் பணி உள்ளிட்ட எந்த பணியிலும் சேர விடாமல் தடுப்பது கடுமையான சிறை தண்டனை என தண்டனையை கடுமையாக்கினாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

ஆனால் ஆப்கானிஸ்தான் போன்ற பழமைவாத நாடுகளை போல் மாணவிகளுக்கு பாடம் எடுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமிப்பது என்பது பிற்போக்குத்தனம். மேலும் திமுக பேசும் பகுத்தறிவிற்கு சிறிதும் ஒத்துவராதது. மேலும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் இரண்டு பேர் சேர்ந்து மாணவிகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த அவலமும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. எனவே பாலியல் தொந்தரவு என்பது ஆண், பெண் என்பதோடு தொடர்புடையது அல்ல. அது மனநிலை தொடர்புடையது. எனவே இப்படி பிற்போக்குத்தனமாக பேசுவதை அன்பில் மகேஷ் நிறுத்துவது சிறப்பு.

மேலும் இளம் சமுதாயத்தை உருவாக்க, எதிர்கால இந்தியாவை கட்டமைக்க பாடுபடும் ஆசிரியர்களில் ஆண் ஆசிரியர்கள் என்றால் ஏதோ பாலியல் குற்றவாளிகாக இருப்பார்கள் என்கிற ரீதியில் பேசியதற்கு அன்பில் மகேஷ் மன்னிப்பும் கேட்டே ஆக வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிடும் ஜாக்டோ ஜியோ போன்ற அமைப்புகள் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயத்தையே இழிவுபடுத்தும் வகையில்  பேசிய அன்பில் மகேஷை கண்டிக்காதது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

click me!