“உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!

By Raghupati RFirst Published May 3, 2022, 4:28 PM IST
Highlights

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.  மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. 

வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும்.தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். 

முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது' என்று கூறினார்.

மதுரை ஆதீனம் இப்படி பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி உள்ளது. சரியாக 5 நாட்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அழகிய மணவாள ஜுயர், சிவக்கிரக யோகிகள் மடத்தின் ஆதீனம் உட்பட 11 ஆதீனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதினம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக அரசு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தருமபுரம் ஆதினம், தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என்று கூறினார். அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை. ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜக -அதிமுக அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக ஸ்டாலின் அரசு மீது கடுமையான விமர்சனங்களை கூறி வருகிறது. திமுக அரசு இந்து விரோத அரசு என்றும் அடிக்கடி குறை கூறி வருகிறது. இந்த குற்றசாட்டை அடித்து நொறுக்குவது போல ஆதீனங்களின் பேட்டி இருந்தது.  அதுமட்டுமின்றி அப்போது பேசிய தருமபுர ஆதீனம், தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழகத்தில் தெய்வீக பேரவையை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். 

ஆதினங்களுக்கான சட்டதிட்டங்கள் பழக்கவழக்கங்களை உரிய வகையில் செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் கூறினோம். நிஜத்தில் இந்த அரசு ஆன்மீக அரசு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் ஒன்றுக்கு இரண்டு முறை இது ஆன்மீக அரசு என்று கூறிய ஆதீனங்கள் தற்பொழுது திமுக அரசுக்கு எதிராக அதுவும், உயிரே போனாலும் பரவாயில்லை என்று கூறுமளவுக்கு அனுமதி மறுப்பது ஏன் ? என்ற கேள்வியே எழுந்து உள்ளது. இது திராவிட அரசா ? அல்லது ஆன்மீக அரசா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலும் எழுந்து உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டியது தமிழக அரசின் கையிலே உள்ளது.

இதையும் படிங்க : Bandh : மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ?

இதையும் படிங்க : 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு !

click me!