
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை தொடங்கிவிட்டது என்றும், இது ஜூன் மாதத்திற்கு பின்னர் உச்சமடைந்து அக்டோபர் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அதிலும் கான்பூர் ஐஐடி இந்த தகவலை உறுதியாக தெரிவித்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர், இதுவரை மூன்று அலைகள் மனிதச் சமூகத்தை தாக்கியுள்ளது. நான்காவது அலை எப்போது ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வைரஸ் தொற்று செங்குத்தாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா 4வது அலை ஜூன் மாதத்தில் உச்சத்தை அடைந்து அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்பிருக்கிறது என கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐஐடி கான்பூர் தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் நான்காவது அலை எப்போது ஏற்படலாம் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நான்காவது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சத்தை அடைந்து, அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது என அது தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் நோய்தொற்று நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை ஐஐடியில் அதிகளவில் தோற்று எண்ணிக்கை பதிவாகி வருகிவது 4வத அலையாக இருக்க கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் செல்வநாயகத்திடம் பேசியதில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் போது அரசே மக்களுக்கு தேவையான எச்சரிக்கையும், தகவல்களையும் வெளியிடும், ஆனால் தற்போதைக்கு அச்சமூட்டும் வகையில் எங்கும் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ளார். அதேபோல் தற்போது ஒருநாள் பாதிப்பு வைத்து நோய்த்தொற்றை நாம் கணக்கிட முடியாது, ஒரு வாரம் ஏழு நாள் கிடைத்த நோய்த்தொற்று எண்ணிக்கை வைத்து, அது கணிசமாக உயரும் போதே நோய்த்தொற்று அலை ஏற்பட்டதாக கருதப்படும் என கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவர் சுப்ரமணியம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நோய்த்தொற்று உயர ஆரம்பித்துவிட்டது, இந்தியா முழுவதுமே தோற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை வைத்து பார்க்கும்போது இந்தியாவின் 4வது அலை தொடங்கிவிட்டது எனலாம், சீனா உள்ளிட்ட நாடுகளில் முழு நோய்க் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகும்கூட நோய்த்தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதைக் காண முடிகிறது. ஆனால் இந்தியாவில் அந்தளவிற்கு இல்லை, அங்கு அதிக அளவில் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படுவதால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.