செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை காவல் தொடர்பான வழக்கு..! உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி

By Ajmal Khan  |  First Published Jul 25, 2023, 3:02 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றமே முடிவு செய்யும் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனையடுத்து 3வது நீதிபதிக்கு வழக்கு சென்ற நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சரி என கூறி வழக்கு மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றினார்.

Tap to resize

Latest Videos

உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும்

இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக இன்று முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் தொடங்கிய போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என செந்தில் பாலாஜி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து நீதிபதி நிஷா பானு கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான எனது தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்று விட்டதால் இந்த வழக்கில் எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கவில்லையென கூறினார். எனவே  செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தார்.மேலும் இந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்தும் வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

 

click me!