
அதிமுக விதிமுறைகளின்படி கட்சியில் பொதுச் செயலாளர் இல்லை என்றால் பொருளாளர் மற்றும் அவைத் தலைவருக்கு மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளதாக மதுசூதனன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதிகாரத்தை கைப்பற்ற சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சசிகலா கட்சியைக் கைப்பற்றிக் கொண்டாலும் அடிமட்டத் தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனர்.
அதிமுக தங்களுக்கே சொந்தம் என சசிகலா தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இரு தரப்பினரும் முயற்சி செய்து வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களிடையே பேசிய மதுசூதனன். அதிமுகவில் பொதுச் செயலாளர் இல்லாத போது அக்கட்சியின் பொருளாளர் மற்றும் அவைத்தலைவருக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளன என தெரிவித்தார்.
அதன்படி சசிகலா அதிமுக பொதுசெயலாலளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தெரிவித்தார்.கட்சியின் அடுத்த பொதுச் செயலாளரை அவைத் தலைவரும் பொருளாளரும் இணைந்து தேர்ந்தெடுப்பார் எனவும் கூறினார்.