மதுசூதனனை மன்னிக்காத ஜெயக்குமார்... பிரேமலதாவிடம் பின் வாங்கியது ஏன்...?

By Vishnu PriyaFirst Published Mar 10, 2019, 3:53 PM IST
Highlights

அப்பேர்ப்பட்டவர் சொந்தக் கட்சியின் மிக மூத்த மற்றும் முக்கிய மனிதரான மதுசூதனனை மன்னித்தோ, பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டோ, பெரியவர் எனும் முறையில் மரியாதை கொடுத்து ஏற்றுக் கொண்டோ ஏன் போக மறுக்கிறார். ஆக தனக்கு பர்ஷன் பகை என்றால் யாருமே ஆகாது, ஆனால் இறந்து போன புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பிரேமா பேசியதை வசதிக்காக மறக்கலாம் இல்லையா!? ஆனால் அதேவேளையில் இந்த விவகாரத்தில் எங்கள் அமைச்சரவையின் ஒரே வீரன் ராஜேந்திர பாலாஜிதான்.

உலக மகளிர் தினத்தன்று பிரேமலதா ஆடிய ருத்ரதாண்டவம் அ.தி.மு.க.வினுள் மிகப்பெரிய பிளவையே உருவாக்கினாலும் ஆச்சரியமில்லை போல.  தே.மு.தி.க.வுக்கு இப்பவும் சப்போர்ட் செய்தபடி  சில சீனியர் அமைச்சர்கள் சீன் செய்ய, பிரேமலதாவுக்கு நெத்தியடி கொடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச, அ.தி.மு.க.வினுள் அல்லு தெறிக்குது உள்ளடி குழப்பங்கள். 

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும், ஜெ., முதல்வராகவும் தங்கள் கட்சிதான் காரணம்! என்று பிரேமலதா பேசிய விவகாரம் ஆளுங்கட்சியினுள் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. கூட்டணிக்குள் விஜயகாந்தை சேர்க்க வேண்டாம் என்று கிளம்பிய குரலுக்கு கிட்டத்தட்ட எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்.ஸும் ஓ.கே. சொல்லிவிட்ட நிலையில், டெல்லி பி.ஜே.பி. தலையிட்டு ‘அமைதியா இருங்கள். அவர்களின் கூட்டணி தேவை.’ என்று வாயை அடைத்திருக்கிறது. 

டெல்லியிலிருந்து இப்படியொரு உத்தரவு வந்ததை அடுத்து சீனியர் அமைச்சர்கள் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு பேச துவங்கியுள்ளனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் “தே.மு.தி.க.வை உயர்த்திப் பிடிக்க பிரேமலதா என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சில கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். மறப்போம் மன்னிப்போம் எனும் அடிப்படையில் அந்த பிரச்னையை விட்டுவிடலாம். பிரேமலதா பேசியது குறித்து கருத்து கூற அ.தி.மு.க. விரும்பவில்லை. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.” என்று விவகாரத்துக்கு பூசி மெழுகி பதில் கொடுத்தார். 

ஆனால் அதிரடி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியோ “அ.தி.மு.க.வுடன் 2011ல் கூட்டணி வைத்ததால்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அவரோடு நாங்கள் சேர்ந்ததால் வென்றோம் என்பது உண்மை இல்லை. அ.தி.மு.க.வோடு இணையாமல் கடந்த 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு சென்ற தே.மு.தி.க.வுக்கு என்ன கிடைத்தது? டிபாசிட் கூட கிடைக்கவில்லை.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார் சிவகாசியில். பிரேமலதா மீது கடும் கோபத்தில் இருக்கும் அ.தி.மு.க.வின் பல நூறு நிர்வாகிகள் மற்றும் பல லட்சம் தொண்டர்களோ இரண்டு முக்கிய அமைச்சர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு கதறக் கதற கருத்துக்களை சொல்ல துவங்கியுள்ளனர். அதில் ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீச துவங்கியுள்ளது. 

அதாவது “தே.மு.தி.க. விஷயத்தில் அமைதி காக்க சொல்லி பி.ஜே.பி. பெரும் நெருக்கடி கொடுக்கிறது என்பது தெளிவாகிறது. அதனால்தான் அமைச்சர் ஜெயக்குமார் இப்படியெல்லாம் பேசுகிறார். இன்னும் கூட்டணி உருவாகாத நிலையில், இந்த நொடி வரை எங்களின் எதிர்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க.வின் பொருளாளரை, அம்மாவை  இகழ்ந்து பேசியும் கூட மன்னிக்கிறார் ஜெயக்குமார், அவர் பேசிய சுடு சொல்களை மறக்கிறார்.  

அப்பேர்ப்பட்டவர் சொந்தக் கட்சியின் மிக மூத்த மற்றும் முக்கிய மனிதரான மதுசூதனனை மன்னித்தோ, பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டோ, பெரியவர் எனும் முறையில் மரியாதை கொடுத்து ஏற்றுக் கொண்டோ ஏன் போக மறுக்கிறார். ஆக தனக்கு பர்ஷன் பகை என்றால் யாருமே ஆகாது, ஆனால் இறந்து போன புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பிரேமா பேசியதை வசதிக்காக மறக்கலாம் இல்லையா!? ஆனால் அதேவேளையில் இந்த விவகாரத்தில் எங்கள் அமைச்சரவையின் ஒரே வீரன் ராஜேந்திர பாலாஜிதான். டிபாசிட் போச்சே! என்று பிரேமலதா கூட்டத்தின் தலையில் குட்டி உட்கார வைத்திருக்கிறார். ரியல் ஹீரோ.” என்று கொண்டாடுகிறார்கள். சர்தான்!

click me!