வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார்... ரஜினி ஒன்னும் சும்மா இல்லை - சொன்னது யாருன்னு பாருங்க!

By Asianet TamilFirst Published Mar 10, 2019, 2:57 PM IST
Highlights

சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் ரஜினி உடனே அரசியல் கட்சியை தொடங்கி, களத்தில் நிற்பார். தமிழ் நாடும் முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார். 

அரசியல் வருகையை அறிவித்துவிட்டு, ரஜினி கடந்த ஓராண்டாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை என்று காந்தி மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
 ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல்தான் தன்னுடைய களம் என்பதை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை. யாரும் தன்னுடைய பெயரையோ புகைப்படத்தையோ தேர்தலில் பயன்படுத்தக்கூடாது என்றும் ரஜினி அறிவித்துவிட்டார்.   நாடாளுமன்றத் தேர்தலில்தான் போட்டியில்லை, 21 சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவாறா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் 21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியில்லை என்று ரஜினி அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் ரஜினியின் நிலைப்பாடு குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர்  தமிழருவி மணியன் தனியார் தொலைக்காட்சியில் கருத்து தெரிவித்தார். 
“ சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் ரஜினி உடனே அரசியல் கட்சியை தொடங்கி, களத்தில் நிற்பார். தமிழ் நாடும் முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார். அரசியல் வருகையை அறிவித்துவிட்டு, ரஜினி கடந்த ஓராண்டாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்தினரை ஒருங்கிணைத்துவருகிறார். தீவிரமாகப் பணியாற்றி தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பூத் கமிட்டியில் ஆட்களை நியமித்து முடித்திருக்கிறார்.
ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து மக்களோடு தொடர்பில் உள்ளனர். ஓர் அரசியல் கட்சிக்கு என்னென்ன அடிப்படை விஷயங்கள் தேவையோ, அது குறித்து விவாதங்களிலும் ரஜினி மூழ்கியிருக்கிறார். ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கும்போது அக்கட்சிக்கான பெயர், சின்னம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, வாக்காளர்களைச் சந்திக்கும்போது வைக்க வேண்டிய கொள்கைகள் என்ன, தேர்தல் அறிக்கையில் என்ன சொல்வது போன்ற எல்லாப் பணிகளும் கடந்த ஓராண்டில் நடைபெற்றுவருகின்றன.”
இவ்வாறு ரஜினி குறித்து தமிழருவி மணியன் தெரிவித்திருக்கிறார்.

click me!