வெட்டி பந்தா... போலி கெளரவம்... பேனர் வைக்க அனுமதி பெற்ற முதல்வரை தாறுமாறாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Oct 3, 2019, 9:18 PM IST
Highlights

இரு தலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் தயாராகிவருகிறது. அதில் ஒரு பகுதியாக இரு தலைவர்களையும் வரவேற்க 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
 

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்பதற்காக பேனர் வைக்க தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை நாடியதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையைச் சுழற்றியது. பேனர் விவகாரத்தில் கடுமையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தது. இதனையடுத்து கடந்த 20 நாட்களாக தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஓரளவுக்கு மட்டுபட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் 11-ம் தேதி மாமல்லபுரம் வருகை தர உள்ளார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் இரு தரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். இரு தலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் தயாராகிவருகிறது. அதில் ஒரு பகுதியாக இரு தலைவர்களையும் வரவேற்க 14 இடங்களில் பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.


இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பேனர் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  மேலும் பேனர் வைத்தால் அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் பேனர் வைக்க நீதிமன்றத்தை நாடிய அதிமுக அரசை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி! இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம். வெட்டி பந்தாக்களிலும், போலி கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக்கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார். 

click me!